பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார்,சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவரது தந்தை அன்னை புத்தகம் என்ற நூலத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். தனது தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இளநிலை இயற்பியல் பட்டம் முடித்த முத்துகுமார், சென்னையில் எம்எஸ்சி மற்றும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.41 வயதாகும் நா.முத்துக்குமாருக்கு தீபலட்சுமி என்ற மனைவி (37), மகன் ஆதவன் (9) மற்றும் மகள் யோகலட்சுமி (8 மாதம்) உள்ளனர்.
தனது ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். பிறகு வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 1500 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ள முத்துக்குமார், தற்போது 100 படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படமும் ஒன்று.
தமிழ் சினிமாவின் பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் நா.முத்துகுமார் பணியாற்றி உள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை எழுதி உள்ளார். சுமார் 1500 பாடல்களுக்கு மேல் எழுதிய நா.முத்துக்குமார், 2007ம் ஆண்டு க்ரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகம் ஆனார். அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார்.
தங்கமீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காகவும், சைவம் படத்தில் அழகே அழகே எதுவும் அழகே பாடலுக்காகவும் இவர் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர 2005 ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். சுமார் 11 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.
நா.முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர்கள் விக்ரமன், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நா.முத்துக்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.